22.6.12
தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.
21.6.12
எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.
20.6.12
கடுநடை, ஓட்டம், பெருஞ்சொல், பேரோசை, இசைபாடுதல், வழக்காடுதல், பெருநினைப்பு, பெருஞ்சிரிப்பு, பெருந்துயர், மிகுபார்வை, ஊன்றிக்கேட்டல், துர்க்கந்த நற்கந்த முகர்தல், சுவை விரும்பல், பேருண்டி, பெருந்தூக்கம், வீண்செயல், பெருமுயற்சி, விளையாட்டு, மலமடக்கல், சலமடக்கல், தாகமடக்கல், பெருநீர் குடித்தல், சயனஉணர்ச்சி, பயம், அகங்காரம், இடம்பம், பேராசை, உலோபம், கோபம், மோகம், மதம் - இவை முதலிய தேகேந்திரிய கரண குற்றங்க ளடையாதிருத்தல்.
19.6.12
நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன: ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கினும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிடதேகமே தக்கதாயும் வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது ஆதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும் படிப்பாதுகாத்தல் வேண்டும்.


"தன்னையும் தனக் காதாரமான தலைவனையும் கூடஸ்தனையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்."